உலகம்

விமானத்தை வீழ்த்திய ஈரான்.. போராடும் பொதுமக்கள்

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 176 பயணிகளுடன் கீவ் நகருக்குப் புறப்பட்ட உக்ரைன் விமானம் நடுவானில் வெடித்து சிதறி அத்தனை பேரும் பரிதாபமாக இறந்து போனார்கள். இந்த விபத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை என தொடர்ந்து 3 நாட்கள் மறுத்த ஈரான், கடைசியில் நாங்கள்தான் தெரியாமல் சுட்டு வீழ்த்தி விட்டோம் என ஒப்புக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் தரையில் இருந்து ஏவப்பட்ட ஒரு ஏவுகணை தாக்கியதால் விமானம் வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வந்தன. கடந்த சில நாட்களாக ஒரு ஏவுகணை இல்லை. இரண்டு ஏவுகணைகளை வீசி உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டதாக வரும் தகவல்கள் சர்வதேச சமூகத்தை கொதிப்படைய வைத்துள்ளது. முதல் ஏவுகணை தாக்கியதில் தீப்பிடித்த விமானத்தை மீண்டும் தெஹ்ரான் விமான நிலையத்துக்கே திருப்பியிருக்கிறார் விமானி. ஆனால் இரண்டாவதாக வந்த ஏவுகணை விமானத்தை சுக்குநூறாக நொறுக்கியது வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. முதல் ஏவுகணை ஏவப்பட்ட அடுத்த 30 விநாடியில் இரண்டாவது ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.

பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சோகமான விஷயத்தை ஈரான் ஆட்சியாளர்கள் கையாண்ட மோசமான விதம், சர்வதேச நாடுகளை மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. ஈரான் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் ஈரானியர்கள். அவர்களில் பலர் கனடா குடியுரிமையும் பெற்றவர்கள். அவர்களில் சிலர் குடும்பத்தினரை பார்க்க வந்த மாணவர்கள். தவறை ஒப்புக் கொண்டவுடன் பிரச்சினை தீர்ந்துவிடும் என ஈரான் அதிகாரிகள் நினைத்தால் அது இமாலயத் தவறு. இந்த சம்பவம் கூடவே, பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அமெரிக்காவுடனும் ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகளுடனும் மோதல் போக்கில் இருக்கும்போது, தெஹ்ரான் சர்வதேச விமான நிலையம் மூடப்படாதது ஏன்? விமான நிலையம் அருகிலேயே நடமாடும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் நிறுத்தப்பட்டது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. மேலும் உக்ரைனின் போயிங் 737 ரக விமானத்தை, தங்களை தாக்க வந்த ஏவுகணை என நினைத்துவிட்டதாக ஈரான் கூறியிருக்கிறது. பயணிகள் விமானத்தின் வேகம் என்ன.. ஏவுகணைகள் பாய்ந்து வரும் வேகம் என்ன.. ஏறக்குறைய 3 மடங்கு வேகத்தில் வரும் ஏவுகணைக்கும் விமானத்துக்கும் வித்தியாசம் தெரியாமலா ஈரான் ராணுவ அதிகாரிகள் வேலை பார்க்கிறார்கள் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

விமானத்தை சுட்டு வீழ்த்திய சம்பவம் தொடர்பாக ஈரான் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சம்பவத்துக்கு காரணமான சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. வேறு சில ஈரான் அதிகாரிகளோ, அமெரிக்கா, காசிம் சுலைமானி மீது தாக்குதல் நடத்தியதால்தான் இந்த பிரச்சினையை வந்தது. இல்லாவிட்டால் இதுவே நடந்திருக்காது என அமெரிக்கா மீது பழி போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இப்படியெல்லாம் பழியை மாற்றி யார் மீதாவது போடுவதன் மூலம், ஈரானின் பாவத்தை துடைக்க முடியாது. கடந்த காலத்திலும் இதுபோன்று நடந்த தவறுகளுக்கு வேறு நாடுகள் மீது பழிபோட்டு சாக்கு போக்கு சொல்லும் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் கடைசியில் அந்த தவறுகளுக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருவதையும் உலக நாடுகள் கவனித்து வருகின்றன. விமானத்தை சுட்டு வீழ்த்திய சம்பவத்தையும் ராணுவத்தின் திறமை இன்மையையும் கண்டித்து பொது மக்கள் போராடி வருகின்றனர். தற்போது தெஹ்ரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில நகரங்களில் மட்டுமே இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தை பரவாமல் தடுத்து, கட்டுக்குள் கொண்டு வர அரசுப் படைகள் தயார் நிலையில் இருக்கின்றன. ஈரானில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் கண்டித்து நடந்த மக்கள் போராட்டம் மிகப் பெரிய வன்முறையாக மாறியது. அதை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். பலி எண்ணிக்கை 200 முதல் 300-க்குள் இருக்கும் என மதிப்பிடப்பட்டது. தற்போது நடக்கும் போராட்டம் எந்த தலைவரும் இல்லாமல், விமான விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும்பாதிக்கப்பட்டவர்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. இருந்தாலும், ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை எந்த நேரத்திலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க முயற்சிக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

-டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

SCROLL FOR NEXT