அமெரிக்காவில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில், “அமெரிக்காவின் யுதா மாகாணத்தில் உள்ள சால்ட் லேக் நகரத்தில் உள்ள இல்லம் ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 4 பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் பெயர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. துப்பாக்கி விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.