உலகம்

ஈரானை சிறந்த நாடாக உருவாக்குங்கள்: ட்ரம்ப்

செய்திப்பிரிவு

ஈரானை மீண்டும் சிறந்த நாடாக்குங்கள் என்று அந்நாட்டுத் தலைவர்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ட்விட்டர் தளத்தில் ’Khamenei.ir’ என்ற பயனாளர் ஒருவர், ஈரானுக்குத் துணை நிற்பதாக அமெரிக்கா கூறுவது பொய் என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரான் மக்கள், அவர்களைக் கொல்லும் அரசை விட அவர்களது கனவுகளை நிறைவேற்ற உதவும் அரசுக்குத்தான் தகுதியானவர்கள். ஈரானை அழிவிற்கு இட்டுச் செல்வதற்குப் பதிலாக பயங்கரவாதத்தைக் கைவிட்டு ஈரானை மீண்டும் சிறந்த நாடாக்க ஈரான் தலைவர்கள் முன்வர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான், அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவைப் பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது.

இந்தச் சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.

SCROLL FOR NEXT