இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை இந்தியாவும், இத்தாலியும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஐநா சர்வதேச கடல் சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தங்கள் விசாரணை வரம்புக்குள் வருவதாக கூறியுள்ள தீர்ப்பாயம், இது தொடர்பாக இத்தாலி, இந்திய அரசுகள் செப்டம்பர் 24-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென கூறியுள்ளது
முன்னதாக 2012 பிப்ரவரி 15-ல் கேரள கடல் பகுதியில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இருவரை இத்தாலிய சரக்கு கப்பலில் பாதுகாப்பு பணியில் இருந்த அந்நாட்டு கடற்படை வீரர்கள் இருவர் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து அந்த கடற்படை வீரர்கள் லட்டோரி, சல்வேடார் கிரோன் ஆகியோர் மீது இந்தியாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது உடனடியாக கைது செய்யப்பட்ட அவர்கள் பின்னர் ஜாமீன் பெற்றனர். இதில் சல்வேடார் டெல்லியில் உள்ள இத்தாலி தூதரகத்தில் தங்கியுள்ளார். லட்டோரி சிகிச்சைக்காக இத்தாலி சென்றுள்ளார்.
வழக்கு விசாரணை இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், விசாரணையை இந்தியா தாமதப்படுத்துவதாகவும், தங்கள் நாட்டினருக்கு தூக்கு தண்டனை விதிக்க முயற்சிப்பதாகவும் கூறி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள சர்வதேச கடல் சட்ட தீர்ப்பாயத்தில் இத்தாலி முறையீடு செய்தது. இதையடுத்து கடல் சட்ட தீர்ப்பாயம் இப்போது புதிய உத்தரவு பிறப்பித் துள்ளது.