ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று மாதமாக காட்டுத் தீயால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் குவின்ஸ்லாந்து போன்ற பகுதிகளில் வெள்ளிக்கிழமை கன மழை பெய்து சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் பாதிப்பு ஏற்பட்ட மாகாணங்களில் குவின்ஸ்லாந்து மாகாணமும் ஒன்று.
இந்த நிலையில் கடந்த 12 மணி நேரத்தில் குவின்ஸ்லாந்து மாகாணத்தில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்றும், 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரு நாளில் பெய்ததால் குவின்ஸ்லாந்து சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது என ஆஸ்திரேலிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ மியாமியில் உள்ள கோல்ட் கோஸ்ட் நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ ஏற்பட்டது இதன் காரணமாக மில்லியன் ஹெக்டேர் கணக்கில் நிலங்கள் தீக்கு இரையாகின.
இதில் 2,000 வீடுகள் எரிந்தன. 28 பேர் பலியாகினர். கோலா கரடி, கங்காரு என பல அரிய வகை விலங்குகள் உட்பட லட்சக்கணக்கான வனவிலங்குகள் இறந்துள்ளன.