உலகம்

சீனாவில் பிறப்பு விகிதம் சரிகிறது

செய்திப்பிரிவு

கடந்த 1949-ம் ஆண்டில் சீனாவில் கம்யூனிஸ்ட் அரசு பதவியேற்றது. பெருகி வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கடந்த 1970-ம் ஆண்டில் அந்த நாட்டில் ஒரு குழந்தை கொள்கை அமல் செய்யப்பட்டது. இதன்மூலம் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.

மனித வளம் குறைந்து வருவதை உணர்ந்த சீன அரசு கடந்த 2016-ம் ஆண்டில் ‘ஒரு குழந்தை' கொள்கையைக் கைவிட்டு ‘இரண்டு குழந்தைகள்' திட்டத்தை அமல்படுத்தியது. ஆனால் அதன்பிறகும் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை.

சீன அரசின் புள்ளிவிவரத்தின்படி கடந்த 2018-ம் ஆண்டில் சீனாவில் ஒரு கோடியே 50 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் பிறந்தனர். கடந்த 2019-ம் ஆண்டில் ஒரு கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. கடந்த ஆண்டைவிட 9 லட்சத்து 58 ஆயிரம் குழந்தைகள் குறைவாகப் பிறந்துள்ளன. சீனாவில் கம்யூனிஸ்ட் அரசு கடந்த 1949-ம் ஆண்டில் பதவியேற்ற பிறகு முதல்முறையாக குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் சரிந்துள்ளது.

முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த சீன பேராசிரியர் யீ புகுஜியன் கூறும்போது, "சீனாவின் மக்கள் தொகை தற்போது 140 கோடியாக உள்ளது. அங்கு முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண ஒரு குழந்தை திட்டத்தை சீன அரசு ரத்து செய்தது. ஆனால் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படவில்லை. சீன பெற்றோர் சிறிய குடும்பத்தையே விரும்புகின்றனர். ஆணோ, பெண்ணோ ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர். இதுவே குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதற்கு முக்கிய காரணம் " என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT