பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டங்களுக்காக அமெரிக்காவிலிருந்து பொருட்களை வாங்கி சட்ட விதிகளை மீறி ஏற்றுமதி செய்ததாக 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது கம்ரான் வாலி, ஒன்டாரியோவைச் சேர்ந்த முகமது அசான் வாலி, ஹாஜி வாலி முகமது ஷேக், ஹாங்காங்கைச் சேர்ந்த அஷ்ரப் கான் முகமது, இங்கிலாந்தைச் சேர்ந்த அகமது வாஹீத் ஆகியோர் மீது அமெரிக்க தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவர்கள் 5 பேரும் பாகிஸ்தானிலுள்ள தங்களது நிறுவனத்துக்காக பொருட்களை அமெரிக்காவிலிருந்து வாங்கி அதை பாகிஸ்தானுக்கு கடத்தி அதை தவறான வழியில் பயன்படுத்தியுள்ளனர். அதாவது அந்தப் பொருட்களை அணு ஆயுதத் திட்டங்களுக்கு அவர்கள் பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பிசினஸ் வேர்ல்டு என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அந்த பொருட்களை பாகிஸ்தானுக்கு கடத்தி சர்வதேச வலையமைப்பை நடத்தியுள்ளதாக 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் 5 பேரும் சர்வதேச அவசரநிலை பொருளாதார சட்டம், ஏற்றுமதி கட்டுப்பாட்டு சீரமைப்புச் சட்டத்தை மீறியதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் உதவி அட்டர்னி ஜெனரல் ஜான் டெமர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இவர்கள் 5 பேரும் தற்போது அமெரிக்காவுக்கு வெளியே வசித்து வருகின்றனர். அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலும் கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்க நீதித்துறையால் இவர்கள் மீது குற்றம்சாட்டப் பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இந்தக் குற்றத்தில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கியுள்ளது. அவர்கள் மீதான கைது வாரண்ட் நிலுவையில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஜேசன் மோலினா கூறும்போது, “இவர்கள் 5 பேர் மீதான குற்றச்சாட்டானது, அமெரிக்காவின் ஏற்றுமதி விதிகளை மீறும் செயலாக அமைந்துள்ளது. இது அமெரிக்காவைப் பொருத்தமட்டில் தேச பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கக்கூடியதாகும்” என்றார்.
இதனிடையே அமெரிக்காவால் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பேர் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஆயிஷா பரூக்கி தெரிவித்துள்ளார்.