இராக்கில் அமெரிக்க ராணுவ தளத்தில் கடந்த வாரம் ஈரான் நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் காயம் அடைந்ததாக அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.
இராக்கில் உள்ள அல் அசாத் விமான தளத்தில் ஈரான் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க வீரர்கள் பலியானதாக ஈரான் கூறியது. ஆனால் இத்தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை என்றும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா கூறி வந்த நிலையில் நிலையில் தற்போது ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவம் தரப்பில் வியாழக்கிழமை கூறும்போது, “ கடந்த ஜனவரி 8 ஆம் தேதி ஈரான் நடத்திய தாக்குதலில் எந்த அமெரிக்க வீரரும் கொல்லப்படவில்லை. ஆனால் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.
ஈரான் நடத்திய தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான், அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவை பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது.
இந்தச் சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.