சிரியா உள்நாட்டுப் போரில் கடந்த 4 மாதங்களில் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் சன்னி பிரிவு கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன.
சிரியாவின் வடமேற்கில் கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் பகுதியில் அதிபர் ஆசாத் படைகள் நேற்று முன்தினம் வான்வழி தாக்குதலை நடத்தின. இதில் பல்வேறு நகரங்கள், கிராமங்கள் உருக்குலைந்தன. கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த 22 வீரர்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ‘வொயிட் ஹெல்மெட்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் கூறியதாவது:
தலைநகர் டமாஸ்கஸ், அலெப்போ நகரை இணைக்கும் இட்லிப் பகுதி சாலைகள் கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சாலைகளை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர சாலையோர நகரங்கள், கிராமங்களை குறிவைத்து அதிபர் ஆசாத்தின் விமானப்படை குண்டுகளை வீசியது. இதில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும். கடந்த 4 மாதங்களில் மட்டும் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஐ.நா. சபை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிரியாவில் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளனர். சிறுவர்கள் போரில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சிறுமிகள் பாலியல் அடிமைகளாக மாற்றப்படுகின்றனர். அரசு, கிளர்ச்சிப் படைகள் என இருதரப்பினரும் மனித உரிமைகளை மீறி வருகின்றனர்.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.