பாமாயில் வாங்க இந்தியா கட்டுப்பாடு விதித்து வருவது பற்றி கவலையடைகிறோம், ஆனால் அதற்காக அமைதியாக இருக்க மாட்டோம் என மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கூறியுள்ளார்.
இந்திய அரசு குறித்து மலேசிய பிரதமர் விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்துமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு கடந்த வாரம் எச்சரிக்கை அனுப்பியது.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் குடியுரிமைத் திருத்த சட்டத்தை மலேசிய பிரதமர் மகாதீர் முகமது விமர்சித்தார். அவர் கூறும்போது, “மதச்சார்பற்ற நாடு என்று தன்னை கூறிக் கொள்ளும் இந்தியா, முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்க நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நான் வருந்துகிறேன். இதே நடவடிக்கையை நாங்கள் எங்கள் நாட்டில் செய்தால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இங்கு குழப்பமும், நிலையற்றத்தன்மையும் உண்டாகும். அனைவரும் பாதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
மலேசிய பிரதமர் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், இது இந்தியாவின் உள் விவகாரம் என்று பதிலளித்து. இதனால் இந்திய – மலேசிய உறவு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மலேசிய நிறுவனங்களிடமிருந்து கச்சா பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் வாங்குவது தொடர்பான ஆர்டர்களை இந்திய நிறுவனங்கள் முற்றிலுமாக நிறுத்திவிட்டன.
கச்சா பாமாயில் இறக்குமதிகுறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் நிறுவனங்கள் அதையும் இறக்குமதி செய்ய முன்வரவில்லை. மலேசியாவுக்குப்பதிலாக இந்தோனேசியாவிலிருந்து கூடுதல் விலைக்கு இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளனர்.
மலேசியாவிலிருந்து அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்யும் இந்தியா, தனது இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தினால் அது மலேசியாவுக்கு பெரும் நெருக்குதலாக அமையும். பாமாயிலைப்பொருத்தமட்டில் மலேசியாதான் விலையை நிர்ணயிக்கும் நாடாக உள்ளது.
மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து 90 லட்சம் டன் பாமாயிலை இந்தியா இறக்குமதிசெய்கிறது. மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் கச்சா பாமாயில்ஒரு டன் விலை 800 டாலராகும். இதை 810 டாலருக்கு இந்தோனேசியாவிலிருந்து தற்போது இறக்குமதி செய்கின்றன.
இதுகுறித்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது
‘‘நாங்கள் அதிகஅளவில் இந்தியாவுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்யும் நிலையில் இந்த கட்டுப்பாட்டால் கவலையடைகிறோம். ஆனால் அதற்காக தவறாக ஏதும் நடந்தால் அமைதியாக இருக்க மாட்டோம். எங்கள் கருத்தை சுதந்திரமாக சொல்வோம். தவறானவற்றை ஏற்றோம் என்றால் பண விவகாரங்களை பற்றி மட்டுமே கவலைப்படும் சூழல் உருவாகி விடும்’’ எனக் கூறினார்.