பாகிஸ்தானில் 10 வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த சீக்கிய மாணவிக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்துள்ளது அந்நாட்டு குருத்வாரா பிரபந்த கமிட்டி.
பாகிஸ்தானில் சமீபத்தில் வெளியான 10 வகுப்பு தேர்வு முடிவில் 1,100 மதிப்பெண்களுக்கு 1035 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தார் மாணவி மன்பீர் கவுர். இது அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி பாகிஸ்தானில் உள்ள சீக்கிய இனத்தவரை பெரும் மகிழச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் மன்பீர் கவுருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக பாகிஸ்தான் குருத்வாரா பிரபந்த கமிட்டி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மன்பீரின் தந்தை கியானி பிரேம் சிங் கூறுகையில், எனது மகள் எங்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளார். தினசரி 12 மணி நேரம் வரை அவர் படித்து வந்தார். அவரது உயர் கல்விக்கும் அதிக உதவிகள் குவிந்துள்ளது. மருத்துவம் படிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் என்றார்.