அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்க்க மத்திய கிழக்கிலுள்ள அனைவரும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும் என்று ஈரான் மூத்த தலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.
கத்தார் இளவரசர் தமிம் பின் ஹமத் அல் தானியுடனான சந்திப்பில் ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி இதனை தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் அயதுல்லா அலி காமெனி கூறும்போது, “ ஊழல் நிறைந்த அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் இப்பிராந்தியத்தில் சாதகமற்ற சூழல் நிலவுகிறது. இதனை எதிர்ப்பதற்கு ஒரே தீர்வு பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக, ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான், அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது.
இந்தச் சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.