சிகாகோ நகரத்தில் நேற்றிரவு பலத்த காற்று மற்றும் மழையுடன்கூடிய குளிர்கால புயல் தாக்கியதால் 1,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 
உலகம்

சிகாகோவில் பனி மழை: 1000 விமானங்கள் ரத்து

ஐஏஎன்எஸ்

சிகாகோ நகரத்தில் நேற்றிரவு பலத்த காற்று மற்றும் மழையுடன்கூடிய குளிர்கால புயல் தாக்கியதால் 1,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சனிக்கிழமை காலை முதலே தொடங்கிய புயல் பாதிப்பினால், நகரின் ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையம் 950க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது, மிட்வே சர்வதேச விமான நிலையம் சுமார் 60 விமானங்களை ரத்து செய்தது என்று சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையும் இதே நிலை நீடிக்கும் என்று வடக்கு இல்லினாய்ஸ் மற்றும் சிகாகோ பகுதிக்கான வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.

நேற்று ஒரே இரவில் பெய்த பனி மழை சிகாகோவின் மொத்த இயல்பு வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது.

சில மாவட்டங்களுக்கு வெள்ள கண்காணிப்பு நடைமுறையில் உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க 1,800 லாரிகள் மற்றும் பிற உபகரணங்கள் வெள்ள சூழ்நிலைகளுக்கு தயார்நிலையில் உள்ளதாக சிகாகோ அவசர நிலை மேலாண்மை கூறியுள்ளது.

இதற்கிடையில், லூசியானா மாநிலத்தில், ஒரு சக்திவாய்ந்த புயல் தாக்கியதில் வயதான தம்பதியினர் பலியாயினர். புயல், அந்தத் தம்பதியினரின் வீட்டை அஸ்திவாரத்திலிருந்து 200 அடி தூரத்திற்கு நகர்த்திச் சென்றது.

நேற்றிரவு தெற்கு அமெரிக்க மாநிலங்களான டெக்சாஸ், லூசியானா மற்றும் அலபாமா வழியாக மணிக்கு குறைந்தது 60 மைல் வேகத்தில் கடுமையான புயல் காற்று வீசியது.

இதனால் ஒரே இரவில் உயிரிழப்புகள், கட்டிடங்கள் சேதம் ஏற்பட்டது, மரங்கள் வேரோடு முறிந்தன. மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டன. இதில் எரிவாயு துறைமுகங்கள் கூட சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT