176 உயிர்களைப் பலி வாங்கிய உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதற்குக் காரணம் ஈரான் ஏவுகணைத் தாக்குதலே என்று நிரூபணமான பிறகு ஈரான் அதிகாரிகள் மன்னிப்புக் கோரினர், ஆனால் பறிபோன உயிர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் மன்னிப்பு மட்டும் போதுமா, இதனால் ஈரானுக்கு எதிரான போராட்டங்கள் ஆங்காங்கே வெடித்துள்ளன.
டெஹ்ரானில் வெடித்தப் போராட்டத்தில் பிரிட்டன் தூதர் ஒருவர் கைதும் செய்யப்பட்டார். விமானம் ஏற்கெனவே தீப்பிடித்தது, என்றெல்லாம் ஈரான் மறுப்பு தெரிவித்து மழுப்பி வந்த நிலையில் அமெரிக்கா அதற்கான ஆதாரங்களை வெளியிட, இராக்கில் அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியபோது உக்ரைன் விமானம் சிக்கியதை ஒப்புக் கொண்டது.
ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி 'மிக மோசமான தவறு’ என்று தெரிவித்தார். இந்நிலையில் டெஹ்ரான், ஷிராஸ், எஸ்ஃபஹான், உருமியே போன்ற நகரங்களில் ஈரானின் கொடூர செயலை எதிர்த்து போராட்டங்கள் வெடித்தன. அதிபர் ட்ரம்ப் போராட்டங்களை ஆதரித்து, “உங்கள் போராட்டங்களை நெருக்கமாக பார்த்து வருகிறோம், உங்கள் தைரியத்தினால் உத்வேகம் பெற்றுள்ளோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.
பிரிட்டன் தூதர் கைது செய்யப்பட்டது குறித்து பிரிட்டன் தன் கண்டனத்தில், “எங்கள் தூதரை டெஹ்ரானில் கைது செய்ததற்கு எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படாதது சர்வதேச சட்டத்தை மீறிய செயல்” என்று தெரிவித்துள்ளது..
ஈரான் எதிர்க்கட்சியான கிரீன் இயக்கத் தலைவர் மெஹ்தி கரவ்பி, ஈரான் தனித்தலைவர் அயதுல்லா அலி காமெனி பதவி விலக வேண்டும் என்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.
விமானம் வீழ்த்தப்பட்டதற்கு உக்ரைன் இழப்பீடு கேட்க, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஈரானின் ஒப்புதல் இதில் முதல் படி என்று தெரிவித்துள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூதியு, “ஈரான் ஒப்புக் கொண்ட விஷயம் மிகவும் சீரியசானது. மக்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது பயங்கரம். ஈரான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். பொறுப்பு ஏற்காதவரை கனடா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது.” என்றார் காட்டமாக 57 கனடா நாட்டினர் இந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் பலியானது குறிப்பிடத்தக்கது.
டெஹ்ரானில் சுமார் 1000 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈரானை எதிர்த்து கோஷமிட்டனர். காசிம் சுலைமானி படத்தையும் போராட்டக்காரர்கள் கிழித்து எறிந்ததையும் பார்க்க முடிந்தது.
அமெரிக்காவுடன் பல மாதங்களாக உராய்வில் இருந்து வரும் ஈரான் தற்போது உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதால் கடும் பன்னாட்டு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
ட்விட்டரில் ஈரானியர்கள் கடும் கோபத்துடன் பதற்றங்கள் இருக்கும் போது ஏன் விமானத்தை புறப்பட அனுமதித்தனர்? என்று கேட்கின்றனர்.