ஐ.நா. சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.40,000 கோடி அளவுக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. உறுப்பு நாடுகளின் ஜிடிபி, கடன், தனிநபர் வருமானம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு ஐ.நா. பட்ஜெட்டுக்கு அளிக்க வேண்டிய பங்களிப்பு நிதி நிர்ணயிக்கப்படுகிறது. ஐ.நா.பட்ஜெட் தொகையில் 22 சதவீதத்தை அமெரிக்கா வழங்குகிறது.
பெரும்பாலான உறுப்பு நாடுகள் ஐ.நா. பட்ஜெட் நிதி பங்களிப்பை முறையாக செலுத்துவதில்லை. இதனால் அந்த அமைப்பு நிதி நெருக்கடியில் சிக்கிக் தவிக்கிறது.
இந்தப் பின்னணியில் ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபானி துஜாரிக், நியூயார்க்கில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறும்போது, “ஐ.நா. சபை பட்ஜெட் நிதி பங்களிப்பை இந்தியா குறிப்பிட்ட நேரத்தில் முழுமையாக வழங்கியுள்ளது. இதன்மூலம் முறையாக பணம் செலுத்திய 4-வதுநாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அந்த நாட்டுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.
ஐ.நா. பட்ஜெட்டுக்காக இந்தியா சார்பில் ரூ.166 கோடியே 10 லட்சம் கடந்த 10-ம் தேதி செலுத்தப்பட்டது. 30 நாட்கள் தவணைக்குள் ஐ.நா.வுக்கு பணம் வழங்கப்பட்டது. இதையே ஐ.நா. சபை பாராட்டியுள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சையது அக்பருதீன் கூறும்போது, "சில நாடுகள் மட்டுமே ஐ.நா. பட்ஜெட் பங்களிப்பு தொகையை முறையாக செலுத்துகின்றன. இந்தியாவை பின்பற்றி இதர நாடுகளும் குறிப்பிட்ட காலத்துக்குள் முழு தொகையை செலுத்தும் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.