மலேசியா-தாய்லாந்து எல்லையில் மேலும் மரணப் புதைகுழிகளையும் 24 மனித எலும்புக்கூடுகளையும் மலேசியா காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஆட்கடத்தலுக்கு ஆளானவர்களின் எலும்புக் கூடுகளாக அவை இருக்கலாம் என்று போலீஸ் கூறியுள்ளது.
வடக்கு மலேசிய எல்லை மாநிலமான பெர்லிஸ்சில் தாய்லாந்து எல்லையருகே மேலும் 39 பிண புதைகுழிகளையும், கைவிடப்பட்ட ஆட்கடத்தல் முகாம்கள் 28-ஐயும் மலேசிய போலீஸார் கண்டுபிடித்தனர்.
கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்ட பிண புதைகுழிகள் இருந்த இடத்துக்கு அருகில்தான் இவையும் உள்ளது ஆனால் இது அடர்ந்த காட்டுப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
கனமழையால் இடுகாடுகள் அழிந்துள்ளன. மே மாதத்துக்குப் பிறகு 106 பிணங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. இவை மியான்மர் அச்சுறுத்தலுக்கு அஞ்சி ஆட்கடத்தல் கும்பலிடம் சிக்கிய ரோஹிங்கிய முஸ்லிம்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது,
எல்லையின் தாய்லாந்து பகுதியிலும் பெருமளவு இடுகாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மியான்மாரின் பவுத்த ஆதிக்கவாத இனமையாவாத அடக்குமுறைக்கு அஞ்சி ரோஹிங்கிய முஸ்லிம்கள் நாட்டைவிட்டு கிளம்பி படு மோசமான ஆட்கடத்தல் கும்பலின் வலையில் சிக்கி வருவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. கடல் மற்றும் நிலப்பகுதிகள் வழியாக இவர்கள் நாடுகடத்தப்படுகின்றனர், அல்லது எல்லைப்பகுதியில் மோசமான முகாம்களில் அடைக்கப்படுகின்றனர், பிறகு கொல்லப்படுகின்றனர் என்று மலேசிய போலீஸ் கூறுகிறது.