உலகம்

உக்ரைன் விமானத்தின் கருப்புப் பெட்டியைச் சோதிக்க விரும்பும் ஈரான்

செய்திப்பிரிவு

உக்ரைன் விமானத்தை ஈரான்தான் சுட்டு வீழ்த்தியது என்று பிற நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டிய நிலையில், கருப்புப் பெட்டியைச் சோதனை செய்ய விரும்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் டெஹ்ரான் அருகே விபத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து விமானம் தனது தொடர்பை இழந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 180 பேர் பயணம் செய்தனர். விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாயினர். பலியானவர்களில் 147 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நடைபெறுவதற்கு சற்று முன்பு இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் விமான விபத்தில் தொடர்ந்து ஈரான் மீது குற்றச்சாட்டுகள் எழ, விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய விமானத்தின் கருப்புப் பெட்டியின் தரவுகளைப் பதிவிறக்கம் செய்து சோதிக்க விரும்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், ஏவுகணைத் தாக்குதலால்தான் விமானம் விபத்துக்குள்ளானது என்பதையும் ஈரான் மறுத்துள்ளது.

இதுகுறித்து ஈரான் தரப்பில், “கருப்புப் பெட்டிகளில் உள்ள தரவுகளைப் பதிவிறக்கம் செய்ய விரும்புகிறோம். ஆனால், கருப்புப் பெட்டி சேதமடைந்திருந்தால் எங்களால் அதைச் செய்ய முடியாது. சேதமடைந்திருந்தால் நிச்சயம் நாங்கள் உதவியை நாடுவோம்” என்று தெரிவித்துள்ளது.

விமானத்தின் கருப்புப் பெட்டியை சோதனையிட ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் ஆகலாம் என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சமயத்தில், விமான நிலையத்தை ஏன் மூடவில்லை என்று ஈரான் நெட்டிசன்கள் பலர் தங்கள் கண்டனத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT