பின்லாந்து பிரதமர் சாரா மரின் | படம் உதவி: ட்விட்டர் 
உலகம்

நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம்; வாரத்துக்கு 4 நாட்கள் வேலை: பின்லாந்து பிரதமரின் திட்டம் உண்மையா? நிலவரம் என்ன?

ப்ளூம்பெர்க்

நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம், வாரத்துக்கு 4 நாட்கள்தான் வேலை, 3 நாட்கள் விடுமுறை என்று பின்லாந்து பெண் பிரதமர் சாரா மரின் பேசியதாக ஒரு செய்தி கடந்த வாரத்தில் சமூக ஊடகங்களில் வலம் வந்தது.

அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய மற்றும் சர்வதேச ஊடகங்கள், பிரதமர் சாரா மரினின் புத்தாக்கமான சிந்தனையைப் பெரும்பகுதி மக்கள் வரவேற்றார்கள். கிண்டல் செய்தார்கள். ஆனால், உண்மை நிலவரத்தைப் பின்லாந்து அரசு தற்போது விளக்கியுள்ளது.

பின்லாந்து நாட்டின் பிரதமராக 34 வயதான சாரா மரின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலக அளவில் மிகக்குறைந்த வயதில் பிரதமரான சாரா மரின் அனைத்துத் தரப்பினராலும், ஊடகத்தினராலும் கவனிக்கப்பட்டார்.

ஆனால், பிரதமர் சாரா மரின் அறிக்கை வெளியிட்டதாக கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதாவது, "நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம்தான் வேலை, வாரத்துக்கு 4 நாட்கள்தான் வேலை, 3 நாட்கள் விடுமுறை" என்று திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

இந்தச் செய்தி வைரலானதையடுத்து, பின்லாந்து அரசே தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''பின்லாந்து பிரதமராக சாரா மரின் வருவதற்கு முன், கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனநாயகக் கட்சியின் ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் சாரா மரின் இந்த ஆலோசனையை முன் வைத்தார்.

அதாவது, இன்னும் எத்தனை நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மணிநேரம் வேலை, வாரத்துக்கு 5 நாட்கள் வேலை என்ற கட்டத்துக்குள் இருப்பது. அதை மாற்ற வேண்டும். இது ஒன்றும் இறுதியானது இல்லையே.

வாரத்துக்கு 4 நாட்கள் வேலை, நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம் வேலை, வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை என்று மாற்றியமைக்க வேண்டும். இதன் மூலம் தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தாருடன் கூடுதலாக 3 நாட்கள் செலவிட முடியும். இதுதான் வாழ்க்கைக்கான திட்டமிடலாக இருக்கும்" என்று ஆலோசனை தெரிவித்தார்.

பிரதமரான பின் இதுபோன்ற ஆலோசனைகளை சரா மரின் வைக்கவில்லை. இந்தத் திட்டம் அவருடையது. பின்லாந்து அரசின்திட்டம் இல்லை. வாரத்துக்கு 4 நாட்கள் வேலை என்று கொண்டுவரும் எண்ணம் ஏதும் பின்லாந்து அரசுக்கு இல்லை".

இவ்வாறு பின்லாந்து அரசு விளக்கம் அளித்துள்ளது.

பின்லாந்து பிரதமர் சாரா மரின் : கோப்புப் படம்

ஆனால் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை, எனும் திட்டத்தை பல நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. ஆஸ்திரேலியாவின் கெஸ்டர் பிளாக் என்ற நிறுவனத்தின் நிறுவனர் அன்னா ரோஸ் கூறுகையில், "வாரத்துக்கு 4 நாட்கள் வேலை என்று கொண்டுவந்தால், ஊழியர்களின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு உற்பத்தி அதிகரிக்கும்" எனத் தெரிவித்தார்.

வெர்சா எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கேத்தரின் பிளாக்ஹம் கூறுகையில், " வாரத்துக்கு 4 நாட்கள் வேலைத் திட்டத்தை எங்கள் நிறுவனத்தில் அறிமுகம் செய்தபின், உற்பத்தி கடந்த 12 மாதங்களில் முன்பு இருந்ததைக் காட்டிலும் 30 முதல் 40 சதவீதம் உயர்ந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்தில் உள்ள பெர்பெச்சுவல் கார்டியன் நிறுவனம் கூறுகையில், "வாரத்துக்கு 4 நாட்கள் வேலைத் திட்டத்தை சோதனை முயற்சியாக ஊழியர்களுக்கு அறிமுகம் செய்து வெற்றி பெற்றுள்ளது. வார விடுமுறை நாட்களில் ஊழியர்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டும், தங்களுக்குப் பிடித்தமான பணிகளிலும் ஈடுபடுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT