உலகம்

ஈரான் ராணுவ தளபதி சுலைமானின் இறுதி ஊர்வல நெரிசலில் சிக்கி 35 பேர் பலி

செய்திப்பிரிவு

அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட ஈரான் புரட்சி படை தளபதி சுலைமானின் இறுதி ஊர்வலத்தில் நெரிசலில் சிக்கி 35 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ”அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட ஈரான் புரட்சி படை தளபதி சுலைமானின் சொந்த ஊரான கெர்மனில் அவரது இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை ஈரான் தலைநகரம் தெஹ்ரானில் நடந்த சுலைமானின் இறுதி ஊர்வலத்தின் இரு பக்கங்களிலும் மக்கள் திரளாக கூடி இருந்தனர். சுமார் 10 லட்சம் மக்கள் சுலைமானின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் கடந்த வாரம் ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் சூறையாடினர். அதற்குப் பதிலடியாக ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் உள்பட 8 பேரைக் கடந்த வாரம் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி கொலை செய்தது

இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் தற்காப்பு நடவடிக்கைக்காக எடுத்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது மத்திய கிழக்குப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

SCROLL FOR NEXT