உலகம்

சுலைமானின் இறுதி சடங்கில் கண்ணீர் விட்டு அழுத அயத்துல்லா அலி காமெனி

செய்திப்பிரிவு

ஈரான் புரட்சி படை தளபதி சுலைமானின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அந்நாட்டின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி கண்ணீர் விட்டு அழுத்தார்.

பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் கடந்த வாரம் ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் சூறையாடினர். அதற்குப் பதிலடியாக ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் உள்பட 8 பேரைக் கடந்த வாரம் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி கொலை செய்தது

இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் தற்காப்பு நடவடிக்கைக்காக எடுத்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. இந்த நிலையில் சுலைமான் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா பழிவாங்கப்படும் என்று ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி உட்பட பலரு சபதம் ஏற்றுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட சுலைமானின் உடல் இராக்கிலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஈரான் வந்தடைந்தது. இறுதி ஊர்வலத்தில் சுமார் பத்தாயிரத்துக்கு அதிகமான சுலைமான் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் அமெரிக்க கொடியும் , ட்ரம்பின் புகைப்படமும் தாக்கப்பட்டன.

ஈரானின் நடைபெற்ற சுலைமானின் இறுதிச் சடங்கில் அந்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

அப்போது பிரார்த்தனையின்போது ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி கண்ணீர் விட்டு அழுத்தார்.

இந்த நிலையில் சுலைமானின் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் எங்கள் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் அழிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT