அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரபல ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமான் இறுதிச் சடங்குக்காக டெஹ்ரான் தெருக்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
இவரது கொலை அமெரிக்காவுக்கு இருண்ட தினத்தைக் கொண்டு வரும் என்று சுலைமான் மகள் ஜீனப் சுலைமானி தேசியத் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
“பைத்தியக்கார ட்ரம்ப் என் தந்தையின் தியாகத்துடன் அனைத்தும் முடிந்து விட்டதாகக் கணவு காணாதீர்கள்" என்று தேசிய தொலைக்காட்சியில் ஜீனப் சுலைமானி ஆவேசமாகப் பேசியுள்ளார்.
அயதுல்லா கோமேனி மறைவின் போது திரண்ட மக்கள் கூட்டத்தை இந்த இறுதிச் சடங்கு கூட்டம் நினைவுபடுத்துவதாக உலக ஊடகங்கள் இதனை வர்ணித்துள்ளன. ஈரானின் மதக்குருமார் ஆட்சியை பிடிக்காத மக்களுக்கும் கூட காசிம் சுலைமான் ஒரு தேசிய ஹீரோவாகப் பார்க்கப்படுகிறார் என்பதே உலக ஊடகங்களின் செய்தியாக உள்ளது.
காசிம் சுலைமான் இடத்தில் நியமிக்கப்பட்ட புதிய கமாண்டர் இஸ்மாயில் குவானி கூறும்போது, “தொடர்ந்து சுலைமான் பாதையில் பயணிப்போம், சுலைமான் இழப்பை ஈடுகட்ட அமெரிக்காவை இந்தப் பிராந்தியத்திலிருந்து விரட்டுவதுதான் ஒரே லட்சியம்” என்றார்.
இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை அனுப்புவதாக இருந்தால் அங்கு ஏற்படுத்தப்பட்ட மிகச் செலவுமிக்க விமான்ப்படை தளத்திற்கான மிகப்பெரிய தொகையை இராக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று ட்ரம்ப் ஏற்கெனவே எச்சரித்துள்ளார். மீறி அமெரிக்கப் படைகளை நட்பு ரீதியாக அல்லாமல் வேறு வகையில் வெளியேற்ற நினைத்தால் ஈரானே பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாதத் தடைகளை இராக் மீது விதிப்போம் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளமை அப்பகுதியில் ஒருவிதமான போர்ப்பதற்றத்தை உருவாக்கியுள்ளது.