சுச்சேதா சதீஷ். 
உலகம்

6 மணிநேரம் இடைவிடாமல் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி சாதனை: துபாய் வாழ் இந்தியச் சிறுமிக்கு ப்ரோடிகி குளோபல் விருது

பிடிஐ

துபாய் வாழ் 13 வயது இந்தியச் சிறுமி 6 மணிநேரம் இடைவிடாமல் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி சாதனை படைத்தார். இந்தச் சாதனையைப் பாராட்டி அவருக்கு 100 குளோபல் சைல்டு ப்ரோடிகி விருது வழங்கப்பட்டுள்ளதாக துபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு இசை நிகழ்ச்சியின்போது பெரும்பாலான மொழிகளில் பாடியதற்காகவும், இடைவிடாமல் நீண்டநேரமாக நேரலையில் பாடியதற்காகவும் சுச்சேதா சதீஷ் என்ற சிறுமிக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து காலீஜ் டைம் செய்தி நிறுவனம் கூறியுள்ளதாவது:

துபாய் இந்தியன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி சுச்சேதா சதீஷ் 120 மொழிகளில் பாடக்கூடியவர். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற கச்சேரியில் 6.15 மணிநேரம் இடைவிடாமல் 102 மொழிகளில் பாடினார்.

அப்போது ஒரு கச்சேரியில் பெரும்பாலான மொழிகளில் பாடியதற்காகவும் இடைவிடாமல் நேரலையில் நீண்டநேரம் பாடியதற்காகவும் இரட்டைச் சாதனைகளுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

அதன்பிறகு அவர் நிறைய பாடல்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். அதற்கு சர்வதேச ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சுச்சேதா சதீஷ் சமீபத்தில் தனது இரண்டாவது ஆல்பமான ‘யா ஹபிபி’ பாடல் தொகுப்பை மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மற்றும் நடிகர் உன்னி முகுந்தன் முன்னிலையில் வெளியிட்டார். 'மாமாங்கம்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்த துபாய்க்கு அவர்கள் வந்திருந்தபோது ஆல்பம் வெளியிடப்பட்டது''.

இவ்வாறு காலீஜ் டைம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT