உலகம்

ஈரான் ஆதரவு தளபதி சுலைமான் மரணம்; இராக் மக்கள் நடனம்: வீடியோ வெளியிட்ட மைக் பாம்பியோ

செய்திப்பிரிவு

ஈரான் ஆதரவு பெற்ற குவாட்ஸ் படையின் தளபதி சுலைமானின் மரணத்தைத் தொடர்ந்து இராக் மக்கள் தெருக்களில் நடனமாடுகின்றனர் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.

அதற்குப் பதிலடியாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் தற்காப்பு நடவடிக்கைக்காக எடுத்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தளபதி சுலைமான் கொல்லப்பட்டதை இராக் மக்கள் தெருக்களில் நடனமாடிக் கொண்டாடுவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மக் பாம்பியோ தெரிவித்து அது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பாம்பியோ தனது ட்விட்டர் பக்கத்தில், “தளபதி சுலைமான் இனி உயிருடன் இல்லை என்பதற்காக, நன்றியுடன் இராக் மக்கள் தெருவில் நடனமாடுகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT