அமெரிக்க ராணுவம் ஆள் இல்லா விமானம் மூலம் இன்று அதிகாலை பாக்தாத் விமானநிலையம் அருகே நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் நாட்டின் எலைட் குட்ஸ் படையின் தளபதி ஜெனரல் குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார் என்று ஈராக் அதிகாரிகள் தெரிவித்தனர்
அதுமட்டுமல்லாமல் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வந்த கிளர்ச்சிப்படை பாப்புலர் மொபைலைசேஷன் ஃபோர்ஸ்(பிஎம்எப்) படையின் துணைத் தளபதி அபு மஹதி அல் முஹன்திஸும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்
ஈரான் ஆதரவில் செயல்பட்டுவந்த இஸ்லாமிக் ரெவலூஸனரி கார்ட் கார்ப்ஸ் படையின் தலைவராக குவசிம் சுலைமான் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் நாட்டின் 2-வது அதிகாரம் படைத்த தளபதியாக சுலைமான் பார்க்கப்பட்டார்.அதாவது மூத்த தலைவரான அயாத்துல்லா அலி காமேனுக்கு அடுத்தபடியாக சுலைமான் கருதப்பட்டார். அமெரிக்காவின் இந்த செயலுக்கு ஈரான் தரப்பில் இருந்து என்ன விதமான பதிலடி இருக்கும் எனத் தெரியவில்லை.
மத்திய கிழக்குப்பகுதியில் மிகப்பெரிய பதற்றத்தையும், திருப்புமுனையையும் ஏற்படுத்தியுள்ளதால், இதற்கு ஈரான் தரப்பிலிருந்து தகுந்த பதிலடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைச் சூறையாடினர்.
ஈராக்கிலுள்ள அமெரிக்க நிலைகள் தாக்கப்பட்டால், அதற்கான தண்டனையை ஈரான் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈராக் ஊடகங்கள் கூறுகையில், " சிரியாவில் இருந்து தளபதி சுலைமானின் விமானம் பாக்தாத் விமானநிலையம் வந்தது, அப்போது அவரை வரவேற்று அலமுகம்திஸ் திரும்பியபோது அமெரிக்க ஆள் இல்லா விமானம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில்அல் முகந்திஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 8 பேரும், ஜெனரல் சுலைமானும் கொல்லப்பட்டனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தளபதி சுலைமான் கொல்லப்பட்டதை அவர் அணிந்திருந்த மோதிரத்தை வைத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் பலமுறை சோல்மானி கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகின. கடந்த 2006-ம் ஆண்டு விமான விபத்தில் சுலைமான் இறந்ததாகவும், 2012ம் ஆண்டில் டாமஸ்கஸில் வெடிகுண்டு தாக்குதலில் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.