உலகம்

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியான தீயணைப்பு வீரர்: கவுரவ பதக்கத்தைப் பெற்ற ஒன்றரை வயது மகன்

செய்திப்பிரிவு

வரலாறு காணாத காட்டுத் தீயை ஆஸ்திரேலியா எதிர் கொண்டுள்ளது. காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாகப் போராடி வருகிறார்கள்.

காட்டுத் தீயை அணைக்கும் பணியில் பலர் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் 32 வயதான ஜெஃப்ரி கிட்டன். கிட்டனும் அவரது நண்பர்களும் கடந்த வாரம் காட்டுத் தீயை அணைப்பதற்கான போராட்டத்தில் மரம் விழுந்து பலியாயினர்.

இந்த நிலையில் கிட்டனின் உயிர்த் தியாகத்தை கவுரவப்படுத்தும் வகையில், அவரது இறுதி நிகழ்வில் கிட்டனின் ஒன்றரை வயது மகன் ஹார்வே கிட்டனுக்கு உயரிய கவுரவப் பதக்கம் அணிவித்து ஆஸ்திரேலிய தீயணைப்புத் துறை பெருமைப்படுத்தியது.

தனது தந்தையின் இழப்பை அறியாத, ஹார்வே கிட்டன் தீயணைப்புத் துறை தலைமை அதிகாரியிடமிருந்து பதக்கத்தைப் பெற்ற காட்சி இறுதிச் சடங்கில் இருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்தது. இச்சடங்கில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்தக் காட்டுத் தீக்கு இதுவரை 1300 வீடுகள் இரையாகியுள்ளன. சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ள நிலையில் 12 பேர் மாயமாகி உள்ளனர். காட்டுத் தீயினால் ஏற்பட்ட இழப்பு காரணமாக அந்நாட்டு பிரதமர மோரிசன் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

SCROLL FOR NEXT