புத்தாண்டு தின வழிபாட்டில் தனது கையைப் பிடித்து இழுத்த பெண் ஒருவரின் கையை உதறியதற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
புத்தாண்டு தின வழிபாட்டில் பொதுமக்களை போப் பிரான்சிஸ் சந்தித்தார். தன்னைப் பார்க்க வந்த பொதுமக்களிடமும், குழந்தைகளிடமும் மகிழ்ச்சியாக கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து வேறு இடத்திற்கு நகர்ந்தார் போப்.
அப்போது பெண் ஒருவர் திடீரென போப்பின் கைகளை இறுகப் பற்றி இழுத்தார். இதனால் நிலை தடுமாறிய 83 வயதான போப் பிரான்சிஸ் அப்பெண்ணின் கைகளை கோபமாக உதறித் தள்ளிவிட்டார்.
இவ்விவகாரம் பெரும் சர்ச்சையானது. அமைதிக்கு உதாரணமான பதவியில் இருக்கும் போப், இவ்வாறு நடந்து கொண்டது ஏமாற்றம் அளிப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது செயலுக்கு போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறும்போது, “ நான் நேற்று மோசமான உதாரணம் ஆனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சில நேரங்களில் நானும் எனது பொறுமையை இழந்து விடுகிறேன்” என்று தெரிவித்தார்.