தங்கள் நாட்டு தூதரகம் மீது தாக்குதல் நடத்தியற்காக ஈரான் விரைவில் பெரிய விலையை கொடுக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைமீது ஈரான் ஆதரவு படையான கடாயெப் ஹிஸ்புல்லா கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, அந்தப் படையினர் மீது அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில், கடாயெப் ஹிஸ்புல்லா படையைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம், இராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மீது கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் தாக்குதல் நடத்தினர். இது அமெரிக்காவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:
அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஈரான் பெரிய தவறை செய்துவிட்டது. இதற்கு ஈரான் அரசுதான் முழு பொறுப்பு. தாம் செய்த தவறுக்கு அந்நாடு விரைவில் பெரிய விலையை கொடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியா கூறுகையில், “இந்த தாக்குதலானது ஈரான் ஆதரவு தீவிரவாதப் படைகளால் நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், இராக்கில் உள்ள அமெரிக்க அரசு நிறுவனங்களை பாதுகாப்பதற்காக விரைவுப் படையைச் சேர்ந்த 750 யூனிட்டுகள் அடுத்த சில வாரங்களில் இராக்குக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதுதவிர, ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்களும் பாக்தாத்துக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்” என்றார்.