ஆப்கானிஸ்தானில் நட ந்த உள்நாட்டுப் போரில் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 1லட்சத்துக்கு அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், “ஆப்கானிஸ்தானில் வன்முறைகளை குறைப்பதற்கான வழிமுறைகளை தேட வலியுறுத்துக்கிறோம். குறிப்பாக பொதுமக்கள் பகுதிகளில், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் காரணமாக 2009 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான ஆப்கான் மக்கள் அரசியல் தீர்வு மூலம் தங்கள் நாட்டில் நடைபெறும் உள் நாட்டுப் போர் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கைதிகள் இடமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் தலிபான்களால் 2016 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட இரண்டு அமெரிக்கப் பேராசிரியர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயற்சியால் விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி ஆகியோரைத் தொடர்புகொண்டு ட்ரம்ப் நன்றி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தலிபான்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை அமெரிக்கா தொடங்கியுள்ளது.