சிரியாவில் உள்ள டைர் அஸ் சாரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து சிரிய போர் கண்காணிப்புக் குழு கூறும்போது, “சிரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டைர் அஸ் சார் மாகாணத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இத்தாக்குதலை யார் நடத்தினார்கள் எந்தத் தகவல் தெரியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள ஈரான் ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் சிரியாவின் வடக்கில் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாகினர்.
இஸ்ரேல்- சிரியா இடையே தீவிரவாதத் தாக்குதல் மற்றும் எல்லைப் பிரச்சினை தொடர்பாக அவ்வப்போது இரு தரப்புக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் இரு தரப்பும் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இஸ்ரேலைப் பொறுத்தவரை ஈரானைத் தங்களுக்கான அச்சுறுத்தல் கொண்ட நாடாகக் கருதுகிறது. இதனால் ஈரான் ஆதரவு நிலைப்பட்டைக் கொண்ட சிரியா மீது இஸ்ரேல் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.