உலகம்

ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தாக்குதல்: 24 மணிநேரத்தில் 100 தீவிரவாதிகள் பலி

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் ஆப்கன் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் தீவிரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் 15 மாகாணங்களில் 18 இடங்களில் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 100 தீவிரவாதிகள் பலியாகினர். 45 பேர் காயமடைந்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களும் பறிக்கப்பட்டன'' என்று தெரிவிக்கப்பட்டது.

கொல்லப்பட்டவர்கள் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்ற தகவலை ஆப்கானிஸ்தான் அமைச்சகம் வெளியிடவில்லை.

தலிபான்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த சில வாரங்களாகவே மூன்று மாகாணங்களில் (நன்கர்ஹர், கந்தஹர், வார்டார்க்) ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்தத் தேடுதல் வேட்டையில் தலிபான்கள் பலர் கொல்லப்பட்டனர். மேலும், தலிபான்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ஆப்கன் பாதுகாப்புப் படையினர் நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில் தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வரும் நேரத்தில் தலிபான்கள் மீது ஆப்கன் அரசு தாக்குதலை நடத்தி வருகிறது.

SCROLL FOR NEXT