இந்தியா வர அழைப்பு விடுத்த பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.
ஆப்கனில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தலிபான்களின் அச்சுறுத்தலை மீறி 90 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தார்கள்.
ஆப்கானிஸ்தானில் நிலவும் போராட்டங்கள் காரணமாகவும், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகவும் தேர்தல் முடிவுகள் இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டன. இந்த நிலையில் சனிக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 50.64% வாக்குகள் பெற்று குறுகிய பெரும்பான்மையில் அஷ்ரப் கானி வெற்றி பெற்றார். இதன் மூலம் ஆப்கன் அதிபராக இரண்டாவது முறையாக அஷ்ரப் கானி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அஷ்ரப் கானிக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இந்தியா வர தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து மோடியின் அழைப்பை அஷ்ரப் கானி ஏற்றுக்கொண்டார்.
இதுகுறித்து அஷ்ரப் கானி கூறும்போது, “என்னுடைய நெருங்கிய இந்திய நண்பர் மோடி இன்று பிற்பகல் என்னைத் தொடர்பு கொண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார். மேலும் எனது இந்தியப் பயணத்தில் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படும்” என்றார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ இந்தியா ஆதரவளிப்பதாக மோடி உறுதியளித்ததாகவும் அஷ்ரப் கானி தெரிவித்தார்.