சிரியாவில் துருக்கி கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பில் குழந்தை உட்பட 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து சிரியாவில் இயங்கு கண்காணிப்பு அமைப்பு ஒன்று கூறும்போது, ''சிரியாவின் வடக்கில் துருக்கி கட்டுப்பாட்டுப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பில் குழந்தை உட்பட 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை” என்று தெரிவித்துள்ளது.
துருக்கியில் தற்போதைய நிலவரப்படி சுமார் 3.7 மில்லியன் சிரிய அகதிகள் உள்ளனர்.
உலகிலேயே அதிக அளவில் அகதிகளைக் கொண்ட நாடாக துருக்கி அறியப்படுகிறது. இந்த நிலையில் சிரியாவின் வடக்குப் பகுதியில் நிகழும் வன்முறை காரணமாக அங்கிருந்து மக்கள் துருக்கி நோக்கி வருவதாக எர்டோகன் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியில் வன்முறை நடந்து வருகிறது.
முன்னதாக, துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றனர். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துள்ள துருக்கி ராணுவம் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகிறது.