மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த வாரத்தில் மட்டும் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 36 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “ஹோண்டுராஸின் தலைநகர் பகுதியிலிருந்து 60 கிலோ மீட்டர் உள்ள சிறைச் சாலையில் கைதிகள் இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சண்டையில் 18 பேர் பலியாகினர். மற்றொரு சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 18 பேர் பலியாகினர்.
கடந்த வாரத்தில் ஏற்பட்ட சிறை வன்முறைகளில் மொத்தம் 36 கைதிகள் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கைதிகளுக்கு இடையே தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து ஹோண்டுராஸ் அரசு சமீபத்தில் சிறைச்சாலை அமைப்பில் அவசர நிலையைப் பிறப்பித்தது. மேலும், சிறைச்சாலையில் பணிபுரிபவர்கள் ஆறு மாதங்களுக்கு வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதிகளுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளில் உள்ள சிறைச்சாலையில் கைதிகள் இடையே வன்முறை ஏற்படுவது வழக்கமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. ஹோண்டுராஸில் உள்ள 29 சிறைச்சாலைகளில் மொத்தம் 20,000க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.