உலகம்

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து விமானப் படை தளத்தை மீட்டது ஏமன் அரசுப் படை

ஐஏஎன்எஸ்

ஏமன் நாட்டில் தொடரும் உள்நாட்டுப் போரில், அரசு ஆதரவு படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அல் அனாத் விமானப்படை தளத்தை மீட்டுள்ளன.

அல் அனாத் பகுதியை கடந்த மார்ச் மாதம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். அதன் காரணமாக, அதிபர் அப்த்ராபோ மன்சூர் ஹதி பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயர்ந்தார்.

இந்நிலையில், சவுதி அரேபிய தலைமையிலான ஆதரவுப் படைகள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களால் சமீபத்தில் ஏடன் பகுதி மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது அல் அனாத் பகுதி மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு படைகளின் செய்தித் தொடர்பாளர் நாசர் அல்கைத் கூறும்போது, "அல் அனாத் பகுதி மீண்டும் அதிபரின் ஆதரவாளர்கள் கைகளில் வந்துவிட்டன. அங்கிருந்து 4 கிமீ தொலைவில் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து அரசு படைகள் தொடர்ந்து போரிட்டு வருகின்றன" என்றார்.

அல் அனாத் பகுதியை அரச படைகள் கைப்பற்றியது குறித்து ஹவுத்திகளிடமிருந்து இன்னும் எந்தத் தகவலும் வரவில்லை.

இந்தப் பகுதியை அரசு படைகள் மீட்டிருப்பது உறுதியானால், கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருக்கும் தைஸ் நகரத்தை நோக்கி அரசு டைகள் முன்னேறுவதற்கு இருந்த தடை நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT