பிரதிநிதித்துவப் படம். 
உலகம்

3 லட்சம் லிட்டர் தண்ணீரை கொள்ளையடித்த தண்ணீர் திருடர்கள்; ஆஸி.யில் வரலாறு காணாத வெப்பம், வறட்சி: 'மேட் மேக்ஸ்' திரைப்படம் போல் எதிர்காலத்தில் நடக்குமா?

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பமும்,வறட்சியும் நிலவுகிறது. தண்ணீருக்காக மக்கள் அலைபாய்ந்து வரும் நிலையில் 3 லட்சம் லிட்டர் தண்ணீரைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ஹாலிவுட்டில் வரும் 'மேட் மேக்ஸ்' திரைப்படத்தில் இயற்கை வளங்களைக் காப்பதற்காக நாடுகளுக்கு இடையே போர் நடக்கும். அதுபோன்று எதிர்காலத்தில் தண்ணீர் போன்ற அரிய வளத்தைக் காக்கப் போர் ஏற்படுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகருக்கு அருகே உள்ள இவான்ஸ் எனும் சிறிய நகரில்தான் விவசாயி ஒருவரின் வீட்டில் இருந்து 3 லட்சம் லிட்டர் தண்ணீர் (80 ஆயிரம் கேலன்) கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியாவில் உள்ள நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவான்ஸ் நகரைச் சேர்ந்த விவசாயி தன்னுடைய பண்ணையில் தன்னுடைய பயன்பாட்டுக்கும், விவசாயத்துக்கும் தண்ணீரைச் சேமித்து வைத்திருந்தார்.

ஆனால், கடந்த 9-ம் தேதி முதல் 15-ம் தேதிக்கு இடையே 3 லட்சம் லிட்டர் தண்ணீரை யாரோ சிலர் கொள்ளையடித்துள்ளனர்.

காலநிலை மாறுபாடு காரணமாக ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு வெயிலும், வறட்சியும் நிலவுகிறது. இதுதவிர ஆஸ்திரேலியன் காடுகளில் காட்டுத் தீ ஆங்காங்கே பற்றி எரிந்து வருகிறது. இதனால், மக்கள் தங்களுடைய கோடைக்காலத்தை இன்பமாகக் கழிக்க முடியாமல் திணறுகின்றனர்

கடந்த இரு வாரங்களுக்கு முன், முர்விலும்பாவ் எனும் சிறிய நகரில் ஏறக்குறைய 25 ஆயிரம் லிட்டர்(6600 கேலன்) தண்ணீர் 6 முதல் 7 டேங்கரில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதுவும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சாதாரணமாக வாழ்வதற்குத் தேவையான குடிநீரைப் பெறுவதற்கே போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு மக்கள் எதிர்காலத்தில் தள்ளப்படும் அபாய சூழலை விளக்கும் மோசமான கற்பனை உலகை இந்தச் சம்பவம் உணரச் செய்கிறது.

ஆஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாகக் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சராசரியாக 40.9 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 41.9 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.

காலநிலை ஆய்வாளர் டேவிட் காரோலி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "காலநிலை மாற்றம் தீவிரமடைந்துள்ளதின் விளைவே கடுமையான வெப்பம் சுட்டெரிக்கிறது. ஒரு டிகிரி முதல் 15 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது.

இதோடு மட்டுமல்லாமல் காட்டுத் தீ ஏற்பட்டு, ஏராளமான மரங்களும் எரிந்து வருகின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டும் சிட்னியில் காஸ்பர்ஸ் மலைப்பகுதியில் 74 லட்சம் ஏக்கர் வனப்பரப்பு எரிந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஆஸ்திரேலிய நாடு மிக மோசமான காலநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சந்தித்து வரும்போது அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிஸன் மக்களைத் தவிக்கவிட்டு விடுமுறைக்குச் சென்றுவிட்டார். ஹவாய் தீவில் தனது குடும்பத்தினருடன் விடுமுறை நாட்களைக் கழித்துவரும் அவரின் புகைப்படம் ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளியாகி பெரும் கண்டனத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய ஊடகங்களும், மக்களும் அதிருப்தி தெரிவித்து வருவதை அறிந்த பிரதமர் ஸ்காட் மோரிஸன், தனது செயலுக்கு மன்னிப்பு கோரி அறிக்கையும் நேற்று வெளியிட்டார். அதில், "ஆஸ்திரேலிய மக்கள் காட்டுத் தீ, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தீய விளைவுகளால் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்தேன். அதற்கு நடவடிக்கை எடுக்காமல் என் குடும்பத்தாருடன் வந்துள்ளதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காகவே ஹவாய் தீவுக்கு வந்துள்ளேன். விரைவில் சிட்னி நகருக்குத் திரும்புவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT