பாகிஸ்தானின் வடக்குப்பகுதியில் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலஅதிர்வு டெல்லி, என்சிஆர் உள்ளிட்ட வடமாநிலங்கள் வரை உணரப்பட்டது. இந்த பூகம்பம் ரிக்டரில் 6.4 அளவாகப் பதிவானது.
இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள புவி அதிர்வு கண்காணிப்பு மையம் கூறுகையில், " ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைப்பகுதியில் பூமிக்கு அடியில் 210 கி.மீஆழத்தில் பூகம்பம் நிலைகொண்டிருந்தது. மாலை 5.மணி9 நிமிடங்களில் ஏற்பட்ட பூகம்பம், ரிக்டரில் 6.4 அளவாகப் பதிவானது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த பூகம்பம் டெல்லி, டெல்லி என்சிஆர், ஜம்மு காஷ்மர், இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய வடமாநிலங்களில ஒருநிமிடம் வரை உணரப்பட்டது என்று இந்தியத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த பூகம்பத்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டது குறித்த எந்ததகவலும் இல்லை. ஆனால், அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் இந்த பூகம்பத்தை ரிக்டரில் 6.1அளவாக மதிப்பிட்டுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் வடக்கு மாநிலங்கள், தலைநகரம் இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர், முர்ரீ ஆகிய நகரங்களில் அதிகமாக உணரப்பட்டது. இந்த பூகம்பம் ஏற்பட்டவுடன் வீடுகளிலும், அலுவலகங்களிலும், கடைகளிலும் இருந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்து சாலைக்கு ஓடி வந்தனர்.
பாகிஸ்தானின் டான் நாளேடு வெளியிட்ட செய்தியில், "பாகிஸ்தான் நாடாளுமன்றம் செயல்பட்டு வந்தபோது, திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால், எம்.பி.க்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தனர். வெளியுறவுத்துறை அலுவலகங்களில் இருந்த அதிகாரிகளும் உடனடியாக வெளியேறினர்" எனத் தெரிவித்துள்ளது
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் தைமூர் அலி கூறுகையில், " அனைத்து பேரிடர் மேலாண்மை குழுக்களையும் தயார்நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். இந்த பூகம்பத்தால் கைபர் பக்துன்கவா மாநிலம், அதையொட்டிய மலைப்பகுதிகளான மாலக்காடு பகுதிகளில் வாழும் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்