அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பதவி நீக்கக்கோரும் தீர்மானம் பிரதி நிதிகள் சபையில் நிறைவேற்றப்படுள்ளது.
ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ள ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் ட்ரம்ப் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விசாரணையை நடத்தி முடிக்கும் வரை உக்ரைனுக்கு அமெரிக்காவின் நிதியுதவியையும் நிறுத்தி வைத்ததாக குற்றச்சாட்டுகள் ட்ரம்ப் மீது எழுந்தன.
இதன் மூலம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு ட்ரம்ப் ஆபத்து விளைவித்து விட்டார் என்றும் அமெரிக்க தேச இறையாண்மைக்கு துரோகம் இழைத்து விட்டார் என்றும் ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது.
இதை அடுத்து ட்ரம்ப்பை பதவியை விட்டு நீக்க திட்டமிட்டு, முதல்கட்டமாக பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கக்கோரும் தீர்மானம் புதன்கிழமைதாக்கல் செய்யப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 230 பேரும் எதிராக 197 பேரும் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து ட்ரம்புக்கு எதிரான தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.
மேலும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ட்ரம்ப் தடுத்தார் என்ற இரண்டாவது தீர்மானத்துக்கு ஆதரவாக 229 பேரும், எதிராக 198 பேரும் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து ட்ரம்புக்கு எதிரான இரண்டாவது தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் ட்ரம்ப்பை பதவி விட்டு விலக்கும் தீர்மானம், செனட் சபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதிலும் ட்ரம்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேறினால் டரம்ப்பின் பதவி பறிபோகும் அபாயம் எற்படலாம்.
முன்னதாக அமெரிக்காவில் பதவி நீக்க நடவடிக்கையை சந்திக்கும் மூன்றாவது அதிபர் ட்ரம்ப். குடியரசுக் கட்சியின் ரிச்சர்டு நிக்ஸன், செனட்டில் தனக்கு போதுமான ஆதரவில்லை எனத் தெரிந்ததும் அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். கடந்த 1868-ல் பிரதிநிதிகள் சபையில் ஆண்ட்ரூ ஜான்சன் மீதான பதவி நீக்க தீர்மானம் வெற்றியடைந்தது.
ஆனால், ஒரே ஒரு வாக்கில் செனட் சபையில் தீர்மானம் தோல்வி அடைந்ததால் அவர் பதவி தப்பியது. 1998-ல் அதிபராக இருந்த பில் கிளிண்டன் மீதான பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் வெற்றி பெற்று, செனட் சபையில் தோல்வி அடைந்தது. அதனால் அவரையும் சட்ட ரீதியாகப் பதவியில் இருந்து நீக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.