உலகம்

சிரிய உள்நாட்டுப் போர்: புதின், மேக்ரான் தொலைபேசியில் ஆலோசனை

செய்திப்பிரிவு

சிரியாவில் தற்போதைய நிலவரம் குறித்து புதினும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் தொலைபேசியில் உரையாடினர்.

இதுகுறித்து ரஷ்ய அரசுத் தரப்பில், “உள்நாட்டுப் போர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள சிரியாவில் தற்போதைய நிலவரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் தொலைபேசியில் உரையாடினர்.

சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கியுடன் ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான இரு நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பும் ஆலோசித்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றனர். சிரியாவில் துருக்கிப் படையினர் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியது.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இது துருக்கிக்கு எதிராகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த, துருக்கி தாக்குதலை நிறுத்தியது. இருப்பினும் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி ராணுவம் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், சிரியாவில் திரும்பப் பெறப்பட்ட அமெரிக்கப் படைகளின் இடத்தை நிரப்பும் வகையில் அவ்விடங்களுக்கு ரஷ்யா தனது படைகளை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT