நியூஸிலாந்தின் ஒயிட் தீவில் எரிமலை வெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
வடக்கு ஐஸ்லாந்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் ஒயிட் ஐஸ்லாந்து தீவில் உள்ள எரிமலை கடந்த வாரம் வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பில் சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டனர். இதனால் ஒயிட் தீவு, கடுமையான பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில் எரிமலை வெடிப்புக்கு 18 பேர் பலியானதாகவும், 17 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நியூஸிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் என்று நியூஸிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் எரிமலை வெடிப்பில் பலியானவர்களுக்கு பிரதமர் ஜெசிந்தா இரங்கல் தெரிவித்தார்.
பலியானவர்களில் சிலரின் உடல்கள் தீவுப் பகுதியிலிருந்து மீட்கப்படாமல் உள்ளதால் அவற்றைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.