அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இதுபோல ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில், ஜோ பிடனின் மகன் ஹன்டருக்கு சொந்தமான உக்ரைனில் செயல்படும் நிறுவ னம் மீதான ஊழல் புகாரை விசாரிக்குமாறு அந்நாட்டு அதிப ருக்கு ட்ரம்ப் அழுத்தம் கொடுத் ததாக புகார் எழுந்துள்ளது. இதற்காக அந்நாட்டுக்கான ராணுவ நிதியுதவியை நிறுத்தி வைத்ததாகவும் ஜோ பிடனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட ட்ரம்ப் முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, இந்தப் புகார் தொடர்பாக அந்நாட்டு நாடாளு மன்ற பிரதிநிதிகள் சபையின் (கீழவை) நீதிக் குழு, விசாரணை நடத்தியது. நீண்ட விவாதத்துக்குப் பிறகு, ட்ரம்ப் மீது கீழவையில் பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், ட்ரம்ப் அடுத்தடுத்து ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். குறிப்பாக 2 மணி நேரத்தில் 123 முறை கருத்து தெரிவித்துள்ளார். அதில் ஜனநாயகக் கட்சியினர் மட்டுமின்றி ஊடகங்களையும் கடுமையாக சாடி உள்ளார்.
இது தொடர்பான ஒரு பதிவில், “நான் எந்தத் தவறும் செய்யாத நிலையில், எனக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டு வருவது நியாயமானதல்ல. நம் நாட்டின் வரலாற்றில் சிறப்பான பொருளாதாரத்தை உருவாக்கி உள்ளேன். ராணுவத்தை மறுகட்டமைப்பு செய்துள்ளேன். வரியைக் குறைத்துள்ளேன். வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளேன். இதுபோல எவ்வளவோ செய்துள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.
கீழவையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை இருப்ப தால் அங்கு இந்தத் தீர்மானம் நிறைவேற வாய்ப்பு உள்ளது. அடுத்தபடியாக செனட் சபையில் தீர்மானம் கொண்டுவரப்படும். அங்கு குடியரசு கட்சிக்கு பெரும் பான்மை உள்ளது குறிப் பிடத்தக்கது.