உலகம்

பிரிட்டன் தேர்தல் வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

பிரிட்டன் பொதுத் தேர்தலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் போரிஸ் ஜான்சன் பிரதமராகிறார்.

இந்நிலையில் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக பிரிட்டனில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “போரிஸ் ஜான்சன் எங்கள் பிரதமர் இல்லை. இனவாதத்துக்கு இங்கு இடமில்லை. அகதிகள் வரவேற்கப்படுவார்கள் எனப் பதாகைகளில் எழுதி நூற்றுக்கணக்கான மக்கள் பிரிட்டனில் பல இடங்களில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டங்களில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து போலீஸார் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரிட்டனில் நடந்த பொதுத் தேர்தலில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் கன்சர்வேடிவ் கட்சி 360க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

இதில் தொழிலாளர் கட்சிக்கு 203 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையுடன் கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வகை செய்யும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிரமாகச் செயல்பட்டார். ஆனால், அவரது பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவை கடந்த நவம்பர் 19-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் எம்.பி.க்கள் தோற்கடித்தனர். இந்நிலையில் பிரிட்டனின் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது.

SCROLL FOR NEXT