உலகம்

பிரிட்டன் தேர்தல்: பெரும்பான்மையுடன் போரிஸ் ஜான்சன் வெற்றி

செய்திப்பிரிவு

பிரிட்டன் பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் 650 இடங்களைக் கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக தொழிலாளர் கட்சி சில இடங்களில் முன்னிலை பெற்ற நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை பெறத் தொடங்கியது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவைப்படும் நிலையில் கன்சர்வேடிவ் கட்சி 358 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதில் தொழிலாளர் கட்சிக்கு 203 இடங்கள் கிடைத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து கருத்துக் கணிப்புகளில் கூறியதுபோலவே கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வகை செய்யும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிரமாகச் செயல்பட்டார். ஆனால், அவரது பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவை கடந்த 19-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் எம்.பி.க்கள் தோற்கடித்தனர்.

இந்நிலையில் பிரிட்டனின் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது.

SCROLL FOR NEXT