அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் கார்சென். | ஏ.பி. 
உலகம்

குடியுரிமைக்கு ‘மத ரீதியான பரீட்சையா?’ - இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து  அமெரிக்க எம்.பி.க்கள் கவலை

ஏபி

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா, 2019 மாநிலங்களவையில் நிறைவேறியவுடன் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கவலைகளை வெளியிடத்தொடங்கினர். மேலும் இதன் விளைவுகள் குறித்த அவர்களது கவலை பல்வேறு கருத்துக்கள் மூலம் தொடர்கிறது.

இது தொடர்பாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினரும் இண்டியனா ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான ஆந்த்ரே கார்சன் கூறும்போது, “அடக்குமுறை, ட்ராக்கோனியன் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றியதையடுத்து எதிர்காலத்தில் கேடுகளை விளைவிக்கும் நகர்வை பிரதமர் செய்துள்ளார் என்பதை நாம் பார்க்கிறோம்.

மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் அதன் மதச்சார்புவாதம் என்ற பின்னணியை வைத்துப் பார்க்கும் போது இந்தச் செயல் ஒன்றும் எதிர்பாராதது அல்ல. இது இந்திய முஸ்லிம்களை இரண்டாம்தர குடிமக்களாகக் குறைப்பதாகும்.

பிற சந்தர்ப்பங்களிலும் மோடி இந்தியாவின் சிறுபான்மையின சமூகத்தை குறிவைத்திருக்கிறார். அப்பிரிவினருக்கான அரசியல் சாசன உரிமைகளையும் சுதந்திரங்களையும் மறுத்திருக்கிறார். இதோடு மட்டுமல்லாமல் அவர்களது ‘இடம்’பற்றிய உணர்வும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்தியா ஒரு பன்முகக் கலாச்சார சமுதாயம் என்ற இருதயத்திற்கு இந்தச் சட்டம் ஒரு அடியாக விழுந்துள்ளது” என்று தெரிவித்தார்.

முன்னதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் குழு ஏற்கெனவே இந்த குடியுரிமை மசோதாவை ‘குடியுரிமைக்கான மதப் பரீட்சை’ என்று சாடியிருந்தது.

“மதங்களின் பன்மைத்துவம் என்பது இந்தியா, அமெரிக்காவின் அடிப்படைகளில் மிக மையமானது. இது இருநாடுகளும் பகிர்ந்து கொள்ளும் முக்கிய மதிப்புகளாகும். எனவே குடியுரிமைக்காக மதரீதியான பரீட்சை வைப்பது ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு குழிதோண்டுவதாகும்” என்று ட்வீட் செய்திருந்தது.

SCROLL FOR NEXT