போரிஸ் ஜான்சன் 
உலகம்

பிரிட்டனில் பொதுத் தேர்தல்

செய்திப்பிரிவு

பலத்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே இங்கிலாந்தில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வகை செய்யும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிரமாக செயல்பட்டார். ஆனால் அவரது பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவை கடந்த 19-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் எம்.பி.க்கள் தோற்கடித்தனர்.

இந்நிலையில் பிரிட்டனின் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் பிரதமர் போரிஸ் ஜான்சனின் திட்டத்தை எம்.பி.க்கள் ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள 650 தொகுதிகளில் வாக்கு சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.

வாக்குப் பதிவை தொடர்ந்து வெள்ளிக்கிழமை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

கடந்த ஐந்து வருடங்களில் இங்கிலாந்து சந்திக்கும் மூன்றாவது பொதுத் தேர்தல் இதுவாகும் .

முன்னதாக, ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து 2019-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்திருந்தது. இந்த விவகாரத்தை 'பிரெக்ஸிட்' என்று அழைத்து வந்தனர். ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மூன்று முறை தோல்வி அடைந்தது.

ஆளும் பழமைவாதக் கட்சி (கன்சர்வேடிவ்) உறுப்பினர்களே தெரசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் தெரசா மே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சில அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

மேலும், பிரதமர் பதவியை கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதி ராஜினாமா செய்தார் தெரசா மே.

இதனைத் தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் போரிஸ் ஜான்சன் தேர்ந்தேடுக்கப்பட்டு பிரதமராக பதவியேற்றார்.

SCROLL FOR NEXT