உலகம்

இந்தியக் குடியுரிமை திருத்த மசோதா: கருத்து தெரிவிக்க ஐ.நா. மறுப்பு

செய்திப்பிரிவு

இந்திய குடியுரிமைத் திருத்த மசோதா குறித்து தற்போது பதிலளிக்க ஐக்கிய நாடுகள் சபை மறுத்துள்ளது.

இந்திய குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்துள்ளார். இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் குடியுரிமைத் திருத்த மசோதாவை பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் விமர்சித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை இதுகுறித்துப் பதிலளிக்க மறுத்துள்ளது.

இதுகுறித்து ஐ. நா.வுக்கான துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் கூறும்போது, “உள்நாட்டு நாடாளுமன்றத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்போது இதற்கு எங்களிடம் கருத்து இல்லை. அதேவேளையில் அனைத்து அரசாங்கங்களும் பாகுபாடற்ற சட்டங்களை ஆராய்வதில் உறுதியாக இருக்கிறதா என்பதே எங்களின் கவலையாக இருக்கிறது” என்றார்

SCROLL FOR NEXT