நியூஸிலாந்தில் ஒயிட் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் 5 பேர் பலியாகினர். சுற்றுலாப் பயணிகள் பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில், “வடக்கு ஐஸ்லாந்திருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒயிட் ஐஸ்லாந்து தீவில் உள்ள எரிமலை ஒன்று இன்று (திங்கட்கிழமை) வெடிக்கத் தொடங்கியது. எரிமலையிலிருந்து சீற்றத்துடன் கரும்புகைகள் வெளிவரத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எரிமலைப் பகுதிக்கு அருகே 50 பேர் சுற்றுலா சென்றுள்ளனர். இதில் 23 பேர் மீட்கப்பட்ட நிலையில் 5 பேர் பலியாகி உள்ளனர். சுற்றுலாப் பயணிகள் பலர் மாயமாகி உள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளது .
ஒயிட் தீவுக்கு சுமார் 10,000 பேர் வரை ஒவ்வோர் ஆண்டும் சுற்றுலா வருகின்றனர். இந்த எரிமலை வெடிப்பு அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது. நியூஸிலாந்தில் உள்ள ஆற்றல் மிக்க எரிமலைகளில் ஒயிட் தீவில் உள்ள எரிமலையும் ஒன்று.