உலகம்

பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் தென் ஆப்பிரிக்காவின் சோசிபினி துன்சி

செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்சி என்பவர் பிரபஞ்ச அழியாக தேந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

2019 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் இறுதி சுற்றில் தேந்தெடுக்கப்பட்ட 7 பெண்களில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 26 வயதான சோசிபினி துன்சி என்பவர் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிலிப்பைன்சின் முன்னாள் உலக அழகியான கேட்ரினா கிரே துன்சிக்கு பிரபஞ்ச அழகிக்கான கீரிடத்தை சூட்டினார்.

பிரபஞ்ச அழகியாக துன்சி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்னர் மேடையில் அவர் பேச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது.

அதில் துன்சி பேசியதாவது, “ என்னை போன்ற நிறத்தையும், முடியையும் உடைய பெண்கள் அழகானவர்கள் என்று கருதப்படாத உலகத்தில் நான் வளர்ந்தேன். ஆனால், இம்மாதிரியான எண்ணங்கள் நிறுத்தப்படுவதற்கான நேரம் இது என்று நினைக்கிறேன். குழந்தைகள் என் முகத்தை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். பிறகு அவர்களது முகம் எனது முகத்தில் பிரதிப்பலிப்பதை அவர்கள் பார்க்கலாம்” என்றார்.

பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட துன்சி தனது மகிழ்ச்சியை பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

SCROLL FOR NEXT