சிரியாவின் வடக்குப் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் 8 குழந்தைகள் பலியாகினர்.
இதுகுறித்து ஏஎன் ஐ வெளியிட்ட செய்தியில், “சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரிபாத் நகரில் நடந்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாகினர். இதில் 8 பேர் குழந்தைகள். பலர் காயமடைந்தனர். இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கல்ஜிபிரின் கிராமத்திலும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாக வில்லை. எனினும் துருக்கி ராணுவம் குர்து படைகளுக்கு எதிராக சிரியாவின் வடக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதால் அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக, சிரியாவின் வடமேற்குப் பகுதியில் இவ்வார தொடக்கத்தில் துருக்கி ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 19 பேர் பலியாகினர். அதில் 12 பேர் குழந்தைகள்.
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றனர். சிரியாவில் துருக்கிப் படையினர் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி ராணுவம் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகிறது.