உலகம்

ஈரானில் ஆயுதம் இல்லாமல் போராடிய அப்பாவி மக்கள் விடுவிக்கப்படுவார்கள்: ஹசன் ரவ்ஹானி

செய்திப்பிரிவு

ஈரான் போராட்டத்தில் ஆயுதம் இல்லாமல் போராடிய அப்பாவி மக்கள் விடுவிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் ஹசன் கூறியுள்ளார்.

ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடந்த மாதம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. பலர் கொல்லப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஈரான் அரசு வெளியிடாமல் இருந்து வந்தது.

இதற்கிடையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என்று ஆம்னெஸ்டி தெரிவித்திருந்தது. ஆனால், இதற்கு ஈரான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் கலவரங்களின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக ஈரான் குற்றம் சுமத்தியது.

சமீபத்தில், ஈரான் போராட்டத்தில், போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஈரான் அரசு ஒப்புக் கொண்டது. இந்த நிலையில் ஈரான் போராட்டத்தில் ஆயுதம் இல்லாமல் போராடி கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுவிக்க வேண்டும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறியுள்ளார்.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தேசிய தொலைக்காட்சியில் கூறும்போது, “இஸ்லாமிய மார்க்கப்படி மக்கள் மீது கருணை காட்ட வேண்டும். போராட்டத்தில் ஆயுதம் இல்லாமல் போராடிய அப்பாவி மக்கள் விடுவிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT