சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து சினுவா வெளியிட்ட செய்தியில், “ சீனாவின் ஷுன்யி மாவட்டத்தில் உள்ள ஜப்பானுக்குச் சொந்தமான தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த மார்ச் மாதம் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 78 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் நடந்த தொழிற்சாலை விபத்தில் 15 பேர் பலியாகினர்.
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தொழிற்சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அங்கீகாரம் பெறாத தொழிற்சாலைகளுக்கு அதிகாரிகள் அனுமதி வழங்குவதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.